சுத்தப்படுத்தும் பணி தொடங்கிவைப்பு

பள்ளப்பட்டியில் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2023-03-08 19:32 GMT

சிவகாசி, 

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் நாரணாபுரம் செல்லும் சாலையில் சிவகாசி சிவன் கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் அதே பகுதியில் தனிநபர்களுக்கு சொந்தமான நிலங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலத்தில் அப்பகுதி மக்கள் குப்பைகளை போட்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் அந்த பகுதியை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் போது அப்பகுதி மக்கள் அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அசோகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அவர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், வருவாய் துறை அதிகாரிகளிடமும் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குப்பைகளை அங்கிருந்து அகற்றவும், அகற்றப்பட்ட குப்பைகளை போட நிலம் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தார். மாவட்ட நிர்வாகம் உரிய இடம் ஒதுக்காத நிலையில் தற்போது குப்பைகள் அகற்றும்பணி பூஜையுடன் தொடங்கியது.

இதில் அசோகன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன், நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜீ.பி.முருகன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வைரக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்