பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

தொடக்க கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-12-06 19:19 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 3-ம் வகுப்பு மாணவர்களில் 20 சதவீதத்தினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது. 23 சதவீதத்தினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது. 52 சதவீதத்தினருக்கு காலண்டரில் நாள், கிழமை, மாதம் ஆகியவற்றைக் கூட அடையாளம் காணமுடியவில்லை என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கற்றல் குறைபாடு நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினை தான் என்றாலும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கவலை அளிக்கிறது. கணிதத் திறனிலும் பிற தென் மாநிலங்கள் தமிழ்நாட்டை விட உயர்ந்த நிலையில் உள்ளன.

கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான். ஆனால், தமிழ்நாட்டு பள்ளிகள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. இதற்கான முதன்மைக் காரணம் கற்றல் கட்டமைப்பு வலிமையாக இல்லாததும், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தான்.

எனவே பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தை ஓர் இயக்கமாக கருதி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்