2-ம் நிலை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் 2-ம் நிலை போலீசார் சிறை மற்றும் தீயணைப்பு துறை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு நடைபெறும் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.;
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் 2-ம் நிலை போலீசார் சிறை மற்றும் தீயணைப்பு துறை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு நடைபெறும் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.
உடல் திறன் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை முதல் 9-ந் தேதி வரை 689 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வுக்கு வருகையில் அழைப்பு கடிதத்தையும் ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பதாரர் தேர்வுகளில் அரைக்கால் சட்டை மற்றும் டீ-ஷர்ட் அணிந்து கொண்டு கலந்து கொள்ள விரும்பினால் ஒரே வண்ணம் கொண்ட உடை மற்றும் எவ்வித எழுத்துக்களும் முத்திரைகளும் வேறு ஏதேனும் படங்களும் இல்லாத டீசர்ட் அணிந்து வர வேண்டும்.
நுழைவுச்சீட்டு
கொரோனா பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது பரிசோதனை அறிக்கையினை பாதுகாவலர் மூன்றாம் நபர் மூலமாக விண்ணப்பதாரரின் அழைப்பு கடிதத்தின் நகல் மற்றும் குறிப்பிட்ட தேதிகளில் தங்களது தேர்வு மைய துணை குழு தலைவரிடம் நேரடியாக வழங்க வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி தேர்வு தேதி பின்னர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வு மையம் நுழைவுச்சீட்டை www.tnusrbonline.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கான உடல் தகுதி தேர்வு தேதி மற்றும் நேரத்தை தெரிந்து கொண்டு சரியான நேரத்திற்குள் தேர்வு மையத்திற்குள் தங்களது தேர்வு மைய நுழைவுச்சீட்டுடன் வருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் விருதுநகர் தேர்வு மைய துணை குழு தலைவர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.