சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை சார்பில் களியக்காவிளையில் தகவல் மையம் திறப்பு
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள், இந்த மையத்தில் ஆலோசனைகள் பெற்று சபரிமலை சென்று வருகின்றனர். இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.