கிராமபுற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லல் ஒன்றியத்தில் ரூ.21¼ கோடியில் சாலைகள் ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தகவல்
கிராமபுற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லல் ஒன்றியத்திற்கு ரூ.21 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும் என ஒன்றியகுழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தெரிவித்தார்.;
காரைக்குடி
கிராமபுற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லல் ஒன்றியத்திற்கு ரூ.21 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும் என ஒன்றியகுழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தெரிவித்தார்.
ஒன்றிய குழு கூட்டம்
கல்லல் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு மீனாள், மேலாளர் சுந்தரம், பொறியாளர் செல்லையா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
ஆணையாளர் செழியன்: ஒன்றியத்தின் நிதி ஆதாரத்திற்கேற்ப அனைத்து வார்டுகளுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் உறுப்பினர்களின் கருத்தறிந்து மேற்கொள்ளப்படும்.
முத்தழகு: தென்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
சங்கீதா: கிராமங்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் கண்மாய் மடைகள், கழுங்குகளை பழுது நீக்கி பராமரிக்க வேண்டும்.
பிரேமா: எஸ்.ஆர்.பட்டினத்தில் கூடுதலாக நெற்களம் அமைக்க வேண்டும். கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
அழகுமீனார் வட்டார வளர்ச்சி அலுவலர்: 44 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அழகப்பன்; நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது குறித்து ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சங்கு உதயகுமார்: கல்லலில் வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரி செலுத்துவோருக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
தரமான சாலைகள்
தலைவர் சொர்ணம் அசோகன்; முதல்- அமைச்சரின் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.21 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 19 சாலைகள் அமைக்க நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. இவற்றில் 75 சதவீதம் தரமற்ற சாலைகளை மேம்படுத்தும் வகையிலும், 25 சதவீத சாலைகள் மக்களின் கோரிக்கையை ஏற்றும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியே 39 லட்சத்தில் 5 சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு தேவையானவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்.
இவ்வாறு கூட்டம் நடைபெற்றது.