மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 22 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2022-ல் 22 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2022-ல் 22 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

உலக சிறுநீரக தினம்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியின் சிறுநீரகத்துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. சிறுநீரகவியல் துறை பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர்கள் தர்மராஜ், விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கதிரியிக்கவியல் மருத்துவ துணை பேராசிரியர் ஜெயராமன், கருவிலுள்ள சிசுவுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள், அதற்கான பரிசோதனைகள் குறித்து விளக்கினார்.

சிறுநீரகவியல் துறை சாதனைகள் குறித்து, துறை தலைவர் மனோராஜன் பேசுகையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியின் சிறுநீரகவியல் துறையில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும், 22 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து 11 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 11 சிறுநீரகங்கள், உறவனர்களிடம் இருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

இதுபோல், கடந்த ஆண்டில் மட்டும் 31 ஆயிரத்து 14 முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 3,237 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை அரசு ஆஸ்பத்திரி டயாலிசிஸ் சிகிச்சையில் தமிழகத்தில் முக்கியபங்காற்றி வருகிறது என்றார்.

உடல் உறுப்புகள் தானம்

கருத்தரங்கில், டீன் ரத்தினவேல் பேசியதாவது:- மதுரை அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவரிகளின் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் ஏராளமான நோயாளிகள் உயிர்வாழ்ந்து வருகின்றனர். உடல் உறுப்புதானம் செய்பவர்களின் குடும்பத்தினரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மனமார பாராட்டுகிறது. அவர்கள் தானம் அளிக்கவில்லை என்றால் எத்தனை மருத்துவர்கள் இருந்தாலும் இந்த சாதனையை செய்ய முடியாது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில், சென்னையை போன்று மருத்துவ பணியாளர்கள், கருவிகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மக்களுக்கு சேவை அளிப்பதில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைகூட வீழ்த்தி விடலாம் என்றார்.

இதனை தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டதுடன், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறுநீரக நோயாளிகளுக்கான கையேடு வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு உழைத்த டாக்டர்கள், நர்சுகள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், டாக்டர் ஜெகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்