தீபாவளி கதர் விற்பனை ரூ.1¼ கோடி இலக்கு கலெக்டர் சரயு தகவல்
தீபாவளி சிறப்பு கதர் விற்பனை இலக்காக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை இலக்காக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.
கலெக்டர் மரியாதை
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அங்குள்ள காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் சரயு மாலை அணிவித்து படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதர் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அனுதிக்கப்பட்டுள்ளது. கதர் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் தீபாவளி கதர் விற்பனையாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விற்பனை குறியீடாக ரூ.70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.
கடன்முறையில் விற்பனை
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் காதி கிராப்ட் விற்பனை மேலாளர் ஜானகிராமன், மாவட்ட காதிகிராப்ட் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் வசந்தி, தாசில்தார் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.