தூத்துக்குடியில் கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடலை போலீசார் மீட்டு, வீசியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்காக நடை மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆங்காங்கே மக்கள் ஓய்வு எடுப்பதற்காக நிழற்குடையும் உள்ளது. இன்று காலையில் வழக்கம் போல் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடற்கரை ஓரத்தில் ஒருசிறிய பொம்மை மிதப்பது போன்று இருந்து உள்ளது. இதனை கூர்ந்து கவனித்த பொதுமக்கள் பச்சிளம் குழந்தை உடல் மிதப்பதை அறிந்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மற்றும் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த குழந்தை உடலை மீட்டனர். அந்த குழந்தை பெண்குழந்தை என்பது தெரியவந்தது. பிறந்து சிலமணி நேரத்தில் கடலில் வீசி இருப்பதும், தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த குழந்தையை யார் கடலில் வீசிச் சென்றார்கள்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.