தனித்தனி விபத்து கார் மோதி தி மு க பிரமுகர் உள்பட 3 பேர் பலி

தனித்தனி விபத்து கார் மோதி தி மு க பிரமுகர் உள்பட 3 பேர் பலி

Update: 2022-06-16 17:30 GMT

திருவெண்ணெய்நல்லூர்

தி.மு.க. பிரமுகர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீதாபதி(வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று மாலை அவரது உறவினர் பிரகாஷ்(42) என்பவரோடு மோட்டார் சைக்கிளில் அரசூர் செல்வதற்காக இருவேல்பட்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீதாபதி, பிரகாஷ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கார்மோதி ஒரே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலியான சம்பவத்தால் இருவேல்பட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியது.

சிறுவன் பலி

அதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் ஆகாஷ்(17). இவரும் பிடாகத்தை சேர்ந்த பாபு மகன் கிஷோர்(14) என்பவரும் மொபட்டில் மேலமங்கலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜானகிபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது அதே திசையில் பின்னால் வந்த கார், அவர்களது மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த கிஷோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்