விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்: தி.மு.க.வில் இணைந்த சுயேச்சை கவுன்சிலர் தலைவராக தேர்வு நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவி இழந்தவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வி

விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சுயேச்சையாக வெற்றி பெற்று தி.மு.க.வில் இணைந்த கவுன்சிலர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-05-25 16:22 GMT

விருத்தாசலம்,

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது, கடலூா் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க. கவுன்சிலரான செல்லத்துரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே போல் துணைத்தலைவராக பா.ம.க. கவுன்சிலர் பூங்கோதை என்பவரும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஒன்றியக்குழு தலைவராக இருந்த செல்லத்துரை தி.மு.க.வில் இணைந்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய கவுன்சிலர்கள் 15 பேர், கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து, ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை பெரும்பான்மையான கவுன்சிலர்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், எனவே அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மனு அளித்தனர்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சிறப்பு கூட்டத்தை கூட்டி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கோட்டாட்சியர் ராம்குமார் நடத்தினார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரைக்கு எதிராக 16 ஓட்டுகள் பதிவானது. செல்லத்துரைக்கு ஆதரவாக ஒரு ஓட்டு மட்டும் பதிவானது. அதனைத் தொடர்ந்து செல்லத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி 16 கவுன்சிலர்கள் அதில் கையெழுத்திட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது.

மறைமுக தேர்தல்

இந்நிலையில் மீண்டும் ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மீண்டும் செல்லத்துரை தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும், சுயேச்சை கவுன்சிலராக வெற்றி பெற்று தி.மு.க.வில் இணைந்த பெண் கவுன்சிலர் மலர் முருகன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 11.10 மணிக்கு மறைமுக வாக்குப்பதிவு தொடங்கி, 10 நிமிடங்களில் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 19 கவுன்சிலர்களும் வாக்களித்தனர்.

இதில், மலர் முருகன் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை 3 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மலர் முருகனிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து மலர்முருகனுக்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கோதை மற்றும் கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் மலர் முருகனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மறைமுக தேர்தலின் போது விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் செயின் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்