இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு
தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தலில் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் நாற்காலி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தலில் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் நாற்காலி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாகிகள் தேர்தல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று தென்காசி - குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேசிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.எம்.காதர் முகைதீன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபுபக்கர், மாநில துணைத்தலைவர் கோதர் முகைதீன், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தள்ளுமுள்ளு
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். அப்போது அங்கு இருந்த ஒரு தரப்பினர் முறையாக தேர்தல் வைத்து நடத்தி நிர்வாகிகளை அறிவிக்க வேண்டும். தன்னிச்சையாக நிர்வாகிகளை அறிவிக்கக்கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது திடீரென்று நாற்காலிகளை தூக்கி வீசினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசார் அங்கு வந்து சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மண்டபத்தை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் அந்த வெளியே நின்று கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
தீர்மானங்கள்
தொடர்ந்து கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தலை உருவாக்குவதற்காக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருவதை கண்டிக்கிறோம். வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். தென்காசி மாவட்டத்தை மலையிட பகுதி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீக்க கேட்டுக்கொள்கிறோம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக அப்துல் அஜீஸ், செயலாளராக செய்யது பட்டாணி, பொருளாளராக செய்யது மசூது மற்றும் துணைத்தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கவுரவ ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.