உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம்
உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குனர் அறவாளி கூறினார்.
உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குனர் அறவாளி கூறினார்.
கருத்தரங்கம்
தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு, "தென்னையை நிலைப்படுத்துவதில் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் புலத் தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். தென்னை வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினர் பன்னைவயல்.இளங்கோ, தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர்.நல்லமுத்து ராஜா, துணை இயக்குனர் ஈஸ்வர், தேசிய உணவு பதன கழக நிறுவனத்தின் புலத் தலைவர் வெங்கடாஜலபதி, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குனர் அறவாளி பேசியதாவது:-
தென்னை என்பது முதலில் இந்தோனேஷியா நாட்டில் பயிரிடப்பட்டது. தற்போது உலகில் 16 நாடுகளில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் இந்தியா தான் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை தென் மாநிலங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டாலும், தமிழகத்தில் அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
57 ஆயிரம் எக்டேர்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தென்னை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் பல்வேறு உதவிகளை, மாநில அரசு மூலமாக வழங்கி வருகிறது. தற்போது தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கேரளாவில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிமாக உள்ளது. தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறைவாக உள்ளது. இந்திய தேங்காய் வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நெல் சாகுபடியை காட்டிலும் தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
காப்பீட்டு திட்டம்
தேங்காயை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்ற விவசாயிகள் உழவர் உற்பத்தி நிறுவனம் மூலம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், தென்னை வளர்ச்சி வாரியம் அனைத்து உதவிகளையும் செய்யும். அதே போல் விவசாயிகள் தென்னை பயிர் காப்பீடு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இதில் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதமும், மாநில அரசும், விவசாயியும் தலா 25 சதவீதமும் பங்கீட்டு முறையில் பிரீமியம் செலுத்தினால் மரங்கள் எதிர்பாராதவிதமாக சேதம் ஏற்படும் போது இந்த காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் கல்லூரி பேராசிரியர் ஜெகன்மோகன் நன்றி தெரிவித்தார்.