தூத்துக்குடி மணியாச்சியில்சுதந்திர ரெயில் நிலைய வார விழா

தூத்துக்குடி மணியாச்சியில்சுதந்திர ரெயில் நிலைய வார விழா திங்கட்கிழமை தொடங்குகிறது.

Update: 2022-07-17 13:11 GMT

தூத்துக்குடி மணியாச்சியில் சுதந்திர ரெயில் நிலைய வார விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

சுதந்திர ரெயில் நிலையம்

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

இதற்காக கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களை நினைவுபடுத்தும் வகையில் "சுதந்திர ரெயில் நிலையம் மற்றும் ரெயில்" என்ற விழா நடத்தப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் சுதந்திர போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரெயில் நிலையம் வாஞ்சி மணியாச்சி ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான சுதந்திரப் போரில் கலெக்டர் ஆஷ் துரை என்பவரை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ஆங்கிலேய அரசை கலக்கமடைய செய்தது.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மணியாச்சி ரெயில் நிலையம் 1988-ம் ஆண்டு வாஞ்சி மணியாச்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த ரெயில் நிலையத்தில் நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வை போற்றும் வகையில் விழா நடத்த ரெயில்வே வாரியம் பரிந்துரைத்து உள்ளது.

இன்று

அதன்படி வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை சுதந்திர சின்னம் வார விழா கொண்டாடப்படுகிறது.

இதன் தொடக்க விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் நடக்கிறது.

விழாவுக்கு மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக வாஞ்சிநாதனின் இளைய சகோதரர் மகன் ஹரிகர சுப்பிரமணியம், அவரது மகன் ஆசிரியர் வாஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விழாவை முன்னிட்டு வாஞ்சிநாதன் பற்றிய புகைப்படக் கண்காட்சி, புகழஞ்சலி, படக்காட்சி ஒளிபரப்பு, ஓரங்க நாடகம் ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்