நெல்லையில் நாளை சுதந்திர தின விழா: கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றுகிறார்

நெல்லையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றுகிறார்.;

Update: 2022-08-13 22:55 GMT

நெல்லை:

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குதல், கலைநிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அதனை கலெக்டர் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடுகிறார். இதையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பில் பங்கேற்கும் போலீசார் நேற்று அணிவகுப்பு ஒத்திகை பார்த்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சரவணன் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிடுவது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. சுதந்திர தின விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சுதந்திர தின விழா நடைபெறும் பகுதிகள், பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகள், வழிபாட்டு தலங்கள் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. ரெயில்களில் போலீசார் மெட்டர் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளை மெட்டல் டிடெக்டர் நுழைவு வாசல் வழியாக மட்டுமே உள்ளே அனுமதித்தனர். பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

இதுதவிர இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம், பாளையங்கோட்டை கடற்படை தகவல் மையம் ஆகிய இடங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை, கடற்படை வீரர்களுடன் இணைந்து போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்