பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்பாடு அதிகரிப;

Update: 2022-11-13 21:14 GMT

463 டன் குப்பைகள்

திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளை உள்ளடக்கி 167 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஒரு நபரிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 421 கிராம் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதன்படி, மாநகர் முழுவதும் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 463 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

இந்த குப்பைகள் அனைத்தும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 கோட்டங்களுக்கு உட்பட்ட உர மையத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு அந்த குப்பைகளில் இருந்து 50 சதவீத குப்பைகள் மக்கும் உரங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

பயன்படுத்த தடை

இந்தநிலையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், உணவுப்பொருட்களை பொட்டலம் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் உறிஞ்சி குழல்கள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் திருச்சி மாநகர பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' பார்களில், 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் தற்போதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் குறுக்கீடுகள் வரும் என்பதால், நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பிளாஸ்டிக் குப்பைகள்

குறிப்பாக மழைக்காலங்களில் சாக்கடை கால்வாய்களை இந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் அடைத்துக்கொள்வதால் மழைநீர் சாலையில் செல்லும் நிலை பல இடங்களில் ஏற்படுகிறது. திருச்சியில் தினமும் 463 டன் குப்பை வெளியேறுவதில், 250 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளது. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மிகப்பெரிய முட்டுக்கட்டையாக பிளாஸ்டிக் கழிவு உள்ளது.

இதில் அதிகமாக, 'டாஸ்மாக்' பார்களில் இருந்தும், சாலையோரம் பொதுவெளியில் மது அருந்துபவர்கள் மூலமும் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேறுகிறது. திருச்சி மாவட்டத்தில் சுமார் 250 'டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இதில் திருச்சி மாநகர் பகுதியில் மட்டும் சுமார் 100 கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளின் அருகில் உள்ள பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.

1 லட்சம் டம்ளர்கள்

சராசரியாக ஒரு பாரில் இருந்து தினமும் 1,000 பிளாஸ்டிக் டம்ளர், 1,000 காலி தண்ணீர் பாட்டில்கள் குப்பைக்கு வருகின்றன. மொத்தமாக தினமும் சராசரியாக 1 லட்சம் டம்ளர்கள், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மக்கும் குப்பையோடு கலக்கின்றன. இதனால் நாட்டுக்கும், வீட்டுக்கும் மட்டுமல்ல, நகரத்துக்கும் மிகப்பெரிய கேடை பார்கள் ஏற்படுத்தி வருகின்றன.

அபரிமிதமான லாபத்துக்காக, பார் உரிமையாளர்கள் பிளாஸ்டிக் டம்ளர்களை விற்கின்றனர். 100 பிளாஸ்டிக் டம்ளர் விலை ரூ.90. டம்ளர் ஒன்றின் அடக்க விலை 90 காசு. ஆனால், பார்களில் ஒரு டம்ளர் ரூ.5 வரை விற்கப்படுகிறது. இவை, 40 மைக்ரானுக்கு உட்பட்டவை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

இத்தகைய டம்ளர் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதை பொருட்படுத்தாமல் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்பாடு இன்று வரை தொடர்கிறது. பார்களை பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்களே நடத்துகின்றனர். அதனால், அரசியல் குறுக்கீடு வரும் என்பதால், அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்கின்றனர். மதுக்கடை பார்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்தாலே, பிளாஸ்டிக் கழிவு பிரச்சினை பெருமளவு குறையும். எனவே இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்