தேனியில் அதிகரிக்கும் இளம்வயது திருமணங்கள்; தடுப்பு நடவடிக்கை தீவிரமடையுமா?

தேனியில் இளம்வயது திருமணங்கள் அதிகரிக்கும் நிலையில் தடுப்பு நடவடிக்கை தீவிரமடையுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;

Update: 2023-07-18 21:00 GMT

பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என்பது ஆட்டோக்களின் பின்புறம் எழுதி வைப்பதற்காக மட்டும் கொடுக்கப்பட்ட வாசகம் அல்ல. அது பெண்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் கொண்டு வரப்பட்ட மகத்தான சட்டம்.

சட்டம் கடுமையாக இருந்தாலும், 18 வயதை எட்டும் முன்பே சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. 18 வயதை எட்டாத சிறுமிகளுக்கு செய்து வைக்கும் திருமணம் குழந்தை திருமணமாக கருதப்படுகிறது. மைனர் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். ஆனாலும், சட்டத்தை மீறும் செயலாக குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது.

குழந்தை திருமணம்

முன்பொரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தாலே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் பல இடங்களில் நடந்தன. அரசின் கடும் நடவடிக்கை, தொட்டில் குழந்தை திட்டம் போன்றவற்றால் பெண் சிசுக்கொலை கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் குழந்தை திருமணம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.

தேனி மாவட்டமும் அதில் விதிவிலக்கு இல்லை. தமிழகத்தில் இளம்வயது திருமணம் அதிக எண்ணிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்ட மாவட்டம் என்ற பெயரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் பெற்றது. ஆனால் தற்போது திருமண வயதை எட்டாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் தேனி மாவட்டம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 இளம்வயது திருமணங்கள் தேனி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

தகவல் கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் அதிகாரிகள் சென்று இதுபோன்ற திருமணங்களை தடுத்து நிறுத்துகின்றனர். இருப்பினும் அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைமுகமாக திருமணம் நடத்தி வைக்கப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது.

மாய வலையில் வீழ்கின்றனர்

இது ஒருபுறம் இருக்க, பள்ளி படிக்கும் போதே காதல் வயப்பட்டு தங்களின் வாழ்வை தாங்களே சிதைத்துக்கொள்ளும் சிறுமிகளின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதே. காதல் வயப்பட்டும், காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பியும் 'மாய வலையில்' விழுந்து வாழ்வில் மகிழ்ச்சியை தொலைக்கும் இளம்வயது பெண்களும் அதிகரித்து வருகின்றனர். கையடக்க செல்போன், பெருகி வரும் சமூக வலைத்தள நட்பு போன்றவை பள்ளிப் பருவத்தில் காதலில் விழ வைத்து, எதிர்கால வளமான வாழ்வை இழக்க வைக்கிறது.

அவ்வாறு காதல் வயப்பட்டு 18 வயதை எட்டும் முன்பே, காதலனை கரம் பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணமாகவே கருதப்படுகிறது. அவ்வாறு நடந்த திருமணங்கள் தாமதமாக தெரியவந்தாலும், வழக்குப்பதிவு செய்யப்படுவது உறுதி. அந்த வகையில் சிறுமிகளிடம் காதல் வயப்பட்டதால் போக்சோவில் சிக்கியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. பிள்ளைகள் காதல் வயப்பட்டதை அறிந்த பெற்றோர், அவர்களுக்கு உறவினர்களில் மாப்பிள்ளை பார்த்து கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நடக்கிறது. கொரோனா கால கட்டத்துக்கு பிறகு இதுபோன்ற பள்ளிப் பருவ காதல், போக்சோ வழக்குகளில் சிக்குவது போன்றவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

போக்சோ வழக்குகள்

அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக தேனி மாவட்டத்தில் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குழந்தை திருமணம் நடந்த நிலையில், பாலியல் உறவுக்கு முன்பே கண்டறியப்பட்டு 3 திருமணங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில், குழந்தை திருமணம் நடந்தவுடன் கண்டுபிடிக்கப்படாமல் சில மாதங்களுக்கு பிறகும், ஓராண்டுக்கு பிறகும் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ ஆகிய இரு சட்டங்களின் கீழ் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல், இந்த ஆண்டு இதுவரை சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக போக்சோ சட்டத்தில் 94 வழக்குகள், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ ஆகிய இரு சட்டங்களின் கீழ் 40 வழக்குகள், குழந்தை திருமணம் நடந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான நிகழ்வுகள் என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சிறுமிகளுக்கு பிரசவம்

இதில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் என்னவென்றால், கடந்த காலங்களில் இளம்வயது திருமணங்கள் என்று தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அதே சிறுமிகள் ஓரிரு ஆண்டு இடைவெளியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொண்டுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அவ்வாறு வரும் நபர்களின் விவரங்களை மருத்துவத்துறையினர், போலீசார் மற்றும் சமூக நலத்துறைக்கு தகவல் கொடுக்கின்றனர். அதிகாரிகள் அங்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலத்தின் பேரில், வழக்குகள் பதிவு செய்யும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்துள்ளன. இதுபோன்ற வழக்குகள் விசாரணையில், இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும், மீண்டும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து வெளியூர்களில் தனிக்குடித்தனம் அனுப்பி விடுவதாகவும், பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் போது சிக்கிக்கொள்வதாகவும் தெரியவந்தது.

கடுமையான நடவடிக்கைகள்

தேனி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க போதிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடும் இல்லை. இதனால் தேனி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் மற்றும் அதன்மூலம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே, இளம்வயது திருமணங்கள், பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளி அளவிலும், கிராமப்புற, நகர்ப்புற அளவிலும் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இளம்வயது திருமணங்களால் உடலும், மனதும் பாதிக்கும்

இதுகுறித்து தேனியை சேர்ந்த மகப்பேறு மற்றும் குடும்ப நல சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் பிரியசக்தி கூறும்போது, "பெண்ணின் திருமண வயது 18 என்று சட்டம் சொன்னாலும், 20 வயதுக்கு பிறகு கர்ப்பமாகும் பெண்களே ஆரோக்கியமாக குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர். இளம்வயது திருமணங்களால் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தானே குழந்தை பருவத்தில் இருந்து மாறாத நிலையில், இன்னொரு குழந்தையை பெற்று வளர்க்கும் நிலையில் மனம் பக்குவப்பட்டு இருக்காது. இளம்வயது திருமணத்தால் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு, குறைமாத பிரசவம், குழந்தையின் எடை குறைவு, கருச்சிதைவு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு கல்வி மிகவும் முக்கியம். பெண்கள் கட்டாயம் பட்டப்படிப்பு வரை படித்தால் தான் அவர்களின் வாழ்வை அவர்கள் பயமின்றி எதிர்கொள்ள முடியும். எனவே, பள்ளிப் பருவத்தில் சட்டத்துக்கு விரோதமாக திருமணம் செய்து வைத்து பெண்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு, அவர்களை பட்டதாரிகளாக உருவாக்கும் எண்ணத்தை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குழந்தை திருமணத்தை தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம்" என்றார்.

பள்ளிகளில் விழிப்புணர்வு

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் கேட்டபோது, "இளம்வயது திருமணங்களை தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக பள்ளிகளில் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடத்தப்பட்டன. இந்த ஆண்டும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கிராமங்களில் பொதுமக்களிடமும், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எங்கு இளம்வயது திருமணங்கள் செய்வதற்கு ஏற்பாடு நடந்தாலும் 1098 என்ற சைல்டு லைன் இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்