சாலை ஆக்கிரமிப்பால் அதிகரித்து வரும் விபத்துகள்

வடபொன்பரப்பியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.;

Update:2023-04-20 00:15 IST

மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடபொன்பரப்பி. இங்குள்ள கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றிச்செல்லும் பெரும்பாலான வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன.

இதனால் இந்த சாலையில் எப்போதுமே போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதனிடையே வடபொன்பரப்பியில் சாலை ஆக்கிரமிப்பால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடபொன்பரப்பி பஸ் நிறுத்தத்தில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் நிழற்குடை இருப்பது தெரியாத அளவுக்கு அதன் முன் பகுதியை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர்.

இதனால் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாததால், அவர்கள் பஸ்சுக்காக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் காத்திருக்கின்றனர். இதன் மூலம் பயணிகள் நிழற்குடை இருந்தும், அது யாருக்கும் பயன்படாத நிலையில் உள்ளது. மேலும் ஆட்டோக்களும் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

இது தவிர சாலையை ஆக்கிரமித்து பதாகைகள், கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கரும்புகளை ஏற்றி கொண்டு வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் கரும்புகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வடபொன்பரப்பி வழியாக வரும்போதெல்லாம், அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்கின்றன.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சாலை ஆக்கிரமிப்பால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இது வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினந்தோறும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்