சென்னை ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் பன்னாட்டு விமான சேவை அதிகரிப்பு; பெரிய ரக விமானங்கள் அடுத்த மாதம் முதல் இயக்கம்

சென்னை ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் பன்னாட்டு விமான சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெரிய ரக விமானங்கள் அடுத்த மாதம் முதல் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2023-06-27 10:05 IST

ஒருங்கிணைந்த புதிய முனையம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையத்தின் முதல் கட்டிடம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது. பின்னர் விமான நிலையத்தில் கூடுதலாக சில அபிவிருத்தி பணிகள் செய்யப்பட்டன. மே மாதம் 3-ந் தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன.

ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் வந்து சென்றன. குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும் சோதனை முறையில் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம், பின்னர் இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன. சோதனை ஓட்டத்தின் போது ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவை சரி செய்யப்பட்டு தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

36 பன்னாட்டு விமான சேவை

கடந்த 13-ந் தேதி முதல் 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இருந்து இயக்கப்பட்டன. கொழும்பு, சிங்கப்பூர், துபாய், தமாம், மஸ்கட், தோகா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து நேற்று முதல் இயங்கதொடங்கி உள்ளது. இதன் மூலம் புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில் இருந்து பன்னாட்டு விமான சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என 36 பன்னாட்டு விமான சேவைகள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து இயங்கத்தொடங்கி உள்ளது.

பெரிய ரக விமானங்கள்

பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பெரிய ரக விமானங்கள் ஜூலை முதல் வாரத்தில் புதிய முனையத்தில் இருந்து இயங்க தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் ஜூலை முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன்பின்பு தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய பன்னாட்டு வருகை முனைய கட்டிடம் இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும். 2-ம் கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்