தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.;

Update: 2024-01-09 06:41 GMT

தூத்துக்குடி,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்தோடுகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

இதன் காரணமாக நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றின் ஒரு பகுதியில் உள்ள முருகன் கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது. இதேபோல் படித்துறைகள், பல்வேறு சிறிய கோவில்கள், மண்டபங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

இந்த நிலையில், தொடர்மழையால் தாமிரபரணி ஆற்றுக்கு வரும் நீரின்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இன்றும் (09.01.2024) நாளையும் (10.01.2024) கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாத்து ஓடை கரையோர பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்