அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நுரை பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நுரை பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 794 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,099 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் வழியாகவும், தென்பெண்ணை ஆற்றிலும் வினாடிக்கு 820 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் குவியல், குவியலாக நுரை பொங்கி செல்கிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், கர்நாடக மாநில ஆற்றங்கரையோர தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளை திறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக பொங்கும் ரசாயன நுரை துர்நாற்றம் வீசி வெள்ளை நிறத்தில் பனி போர்த்தியது போல் காணப்படுகிறது. ெதன்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் திறந்து விடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி அணை
இந்த தண்ணீரும், மார்க்கண்டேய நதியில் வரும் தண்ணீரும், எண்ணேகொல்புதூர் பகுதிகளில் கலந்து, கிருஷ்ணகிரி அணைக்கு செல்கிறது. கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,083 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,987 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 1,651 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் ஒட்டியவாறு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.
பாம்பாறு அணை
மேலும், சின்னாறு அணைக்கு தொடர்ந்து 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் வந்தது. ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 282 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,120 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.