ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடானது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது.;
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தொட்டபெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேலும் கர்நாடக காவிரி கரையோர பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் அறிவுறுத்தல்
மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, நாகர்கோவில், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் குளிக்க கூடாது என்றும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.