கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 64 சதவீதமாக அதிகரிப்பு

கிருஷ்ணா நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 64 சதவீதமாக அதிகரித்தது. தற்போது கிருஷ்ணா நீர் வினாடிக்கு 280 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

Update: 2023-07-20 12:36 GMT

64 சதவீதமாக அதிகரிப்பு

கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே 3-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 மாதத்தில் இதுவரை சுமார் 2 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. இந்த ஏரியில் 3.231 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது 2.082 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். ஏரிக்கு வினாடிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

5 ஏரிகளில் 7 டி.எம்.சி தண்ணீர் இருப்பு

இதை தொடர்ந்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 2.235 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 1.081 டி.எம்.சி.யில் 89 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 2.347 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்ட ஏரியில் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கனஅடியில் 377 மில்லியன் தண்ணீர் இருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் மொத்தம் 7.130 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இது மொத்த தண்ணீர் இருப்பில் 60 சதவீதம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்