அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரிப்பு

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரிப்பு

Update: 2022-06-23 19:49 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.300-க்கு விற்பனையும், கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெள்ளி மீன்கள் வரத்து அதிகரிப்பு

அதிராம்பட்டினம் கடல்பகுதியான ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய துறைமுக பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். வெள்ளி மீன்களை பிடிப்பதற்கு மட்டும் அதற்கான வலைகளை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். கடந்த 6 மாத காலமாக கடலில் மீன்வரத்து குறைந்து வந்த நிலையில், தற்போது வெள்ளி மீன்கள் மீனவர் வலையில் அதிகளவில் சிக்கி வருகின்றன. பொதுவாக இந்த மீன்கள் மிக குறைவாக காணப்படும். தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன் கிலோ ரூ.500-க்கு விற்பனை ஆனது. தற்போது கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.

கேரளாவுக்கு ஏற்றுமதி

இங்கு பிடிபடும் வெள்ளி மீன்கள் வியாபாரிகள் மூலம் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அதிராம்பட்டினம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இந்த மீன்களுக்கு வெள்ளிமீன், தேசப்பொடி, வெள்ளைபொடி, பொடிமீன், கேரளாவில் மட்லீஸ் என பல்வேறு பெயர்கள் உண்டு. கேரளாவில் இந்த மீனுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இங்கு பிடிப்படும் மீன்கள் அதிகளவில் கேரளாவுக்கு ஏற்றுமதியாகிறது. அதிராம்பட்டினத்தில் உள்ள மார்க்கெட்டிற்கு நேற்று உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வெள்ளி மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இந்த மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்