ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைந்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு

Update: 2023-02-14 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒரு மாத காலமாக நெல் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 75 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையை விட சன்ன ரகத்துக்கு எங்களிடம் விலை அதிகம் என்பதே இதற்கு முக்கியமான காரணமாகும் என்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் குறித்து விவசாயிகள் கூறும்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அறுவடை செய்த நெல்லை எடுத்துச் செல்லும் போது அங்கு நெல்லில் ஈரப்பதம் இருப்பதாகவும், தூசு மற்றும் குப்பைகள் கலந்து இருப்பதாகவும் கூறி மூட்டை ஒன்றுக்கு 10 முதல் 20 கிலோ வரை கழிக்கின்றனர். இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல் சாக்கு மாற்றுவதற்கும் எடை போடுவதற்கும் லஞ்சம் மற்றும் இதர செலவு என அதிகபட்சமாக ஒரு மூட்டைக்கு ரூ.85 வரை கொடுக்க வேண்டி உள்ளது. இந்த பணிகள் எல்லாம் முடிந்தும் பணம் கிடைக்க ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகி்றது. எனவே தான் நாங்கள் நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து செல்கிறோம். வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு கொள்முதல் செய்வதால் எங்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பணமும் அதிகபட்சம் 2 அல்லது 3 நாட்களில் கிடைத்து விடுகிறது என்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்