சிலிண்டரை தூக்கி வருவதற்கும் பணம் கேட்பது சரியா?

அதிகரித்து கொண்டே செல்லும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஒருபுறம் இருப்பினும், சிலிண்டரை தூக்கி வருவதற்கும் பணம் கேட்பது சரியா? என்பது குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

Update: 2022-10-06 18:45 GMT

அதிகரித்து கொண்டே செல்லும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

தற்போதைய நவீன கால கட்டத்தில் கால விரயத்தை குறைப்பதற்காக பல்வேறு நவீன எந்திரங்கள் வந்துவிட்டன. முன்பு சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை இல்லத்தரசிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது விறகு அடுப்பை எந்தவீட்டிலும் காண முடியாத அளவுக்கு அனைவருடைய வீடுகளிலும் கியாஸ் அடுப்புகள் வந்துவிட்டன. வெந்நீர் போடுவதில் ஆரம்பித்து சமையல் செய்வது வரையிலும் அனைத்தும் கியாஸ் அடுப்பில்தான் செய்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கியாஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் விறகு அடுப்பையே பயன்படுத்தலாமா? என அவர்கள் எண்ண தொடங்கி விட்டனர். கியாஸ் விலை ஒருபுறம் இருக்க அதை வினியோகம் செய்ய வருபவர்களும் ரூ.50 முதல் ரூ.100 வரை கேட்கின்றனர். இது இல்லத்தரசிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து இல்லத்தரசிகளிடமும், கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்பவர்களிடமும் கேட்கப்பட்ட கருத்துகள் விவரம் வருமாறு:-

மனிதாபிமான அடிப்படையில்

செல்வ மீனா (குடும்பத்தலைவி-விருதுநகர்):- கியாஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டி தற்போது ரூ.1094-ஐ எட்டிவிட்டது. இதற்கான மானியம் மிகவும் குறைக்கப்பட்டு விட்ட நிலையில் நடுத்தர சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில் உள்ளதால் வேறு வழியில்லாமல் உள்ளோம்.

இதற்கிடையே சிலிண்டர் டெலிவரி செய்யும் நிறுவன ஊழியருக்கு ரூ.30 கொடுத்து வருகிறோம். நிறுவனமே அவர்களுக்கு டெலிவரி கட்டணம் கொடுப்பதாக சொல்லப்பட்டாலும், மனிதாபிமான அடிப்படையில் சிலிண்டருக்கான தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக கொண்டு வருவதால் இதை ஒரு செலவாக கருதாமல் அவர்களுக்கு பணம் கொடுத்து வருகிறோம் என்றார்.

மாத பட்ஜெட்

ராஜலட்சுமி (குடும்பத்தலைவி-விருதுநகர்):- மாத பட்ஜெட்டில் கியாஸ் சிலிண்டருக்கான தொகையை முதலிலேயே எடுத்து வைக்க வேண்டிய அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. அரசு வழங்கும் மானியமும் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பது ஓரளவு மன நிம்மதியை தருகிறது. மேலும் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ரூ.30 கொடுத்து வருகிறோம்.

சில நேரங்களில் வரும் ஊழியர்கள் கூடுதலாக எதிர்பார்ப்பதால் ரூ.50 வரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் நமக்காக மாடிப்படி ஏறி வந்து கொடுக்கும் போது அவர்களுக்கு ரூ.50 கொடுப்பதில் தவறில்லை என்பதே எங்களது எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

சேவை மனப்பான்மையுடன்

கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர் கோபால்:- கியாஸ் சிலிண்டர் வினியோக பணி காலையிலேயே தொடங்கி விடும். நாள் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறோம். மாடிப்படிகளிலும், சில நேரங்களில் அடுக்குமாடி வீடுகளுக்கும் சென்று வினியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆனாலும் எங்களுக்கு சலிப்பு தட்டுவதில்லை. எங்களுக்கு பிழைப்பு ஒரு புறம் இருந்தாலும், இதை சேவை மனப்பான்மையுடன் செய்கிறோம். வீடுகளில் அவர்களாக மனமுவந்து காசு கொடுத்தால் பெற்றுக்கொள்வோம். கண்டிப்பாக யாரிடமும் காசு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. அவர்களிடம் பிரச்சினையும் செய்வதில்லை. சில நேரங்களில் சிலிண்டர் வினியோகம் தாமதம் என்று மக்கள் கோபப்பட்டாலும்கூட நாங்கள் கோபப்படுவதில்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்