பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பு
முதுகுளத்தூர் அருகே பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பருத்தி சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் குறைவாக இருந்தாலும் பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முதுகுளத்தூர், இதம்பாடல், சிக்கல், மல்லல் செங்கற்படை, தேரிருவேலி, ராமநாதபுரம், காவனூர் ஆர்.எஸ் மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் பருத்தி சாகுபடி நடைபெற்று உள்ளது.
பருத்தி சீசன் தொடங்கிய மாதங்களில் ஒரு கிலோ பருத்தி ரூ.120 வரையிலும் விலை போனது. இந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் பருத்தி விளைச்சல் குறைந்துள்ளதுடன் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பூச்சி தாக்குதல் அதிகரிப்பு
குறிப்பாக முதுகுளத்தூர், தேரிருவேலி, செங்கற்படை உள்ளிட்ட கிராமங்களில் பருத்தியில் பூச்சித்தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் பூச்சி தாக்குதலில் இருந்து பருத்திச் செடிகளை காப்பாற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளையும் செடிகளில் அடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி முதுகுளத்தூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது:-
முதுகுளத்தூர் தாலுகா சுற்றிய பல கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பருத்தி செடிகளில் ஒரு விதமான நோய் தாக்குதல் இருந்து வருகின்றது.இதனால் பருத்தி விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் செடிகளில் பூச்சி கொல்லி மருந்து அடித்து வருகின்றோம். கடந்த சிலவாரங்கள் வரை கிலோ 120 ரூபாய்க்கு விற்ற பருத்தி தற்போது கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கிறது. தற்போது விளைச்சலும் குறைந்து உள்ளது. விலையும் குறைந்து உள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.