முதுமலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

முதுமலையில் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-05-20 19:45 GMT

கூடலூர்

முதுமலையில் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

இடம்பெயர்ந்த யானைகள்

கூடலூர், மசினகுடி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வனப்பகுதி வறட்சியாக மாறியது. தொடர்ந்து காட்டுயானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர்நிலைகளும் வறண்டது. இதனால் காட்டு யானைகள் பல்வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

இந்த நிலையில் கூடலூர், முதுமலை மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனத்தில் பசுந்தீவனங்கள் செழுமையாக வளர்ந்து வருகிறது. மேலும் முதுமலையில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காட்டுயானைகள் முதுமலைக்கு மீண்டும் திரும்பி உள்ளதாக வனத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

கணக்கெடுப்பு

இதற்கிடையில் தென்னிந்திய அளவில் ஒருங்கிணைந்த காட்டுயானைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதனால் கூடலூர், முதுமலை வனத்தில் 228 வன ஆர்வலர்கள், 50 தன்னார்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தென்பட்டது. இதனால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

நிரம்பிய நீர்நிலைகள்

வறட்சியால் முதுமலையில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. மேலும் பசுந்தீவனமும் வளர்ந்துள்ளதால் காட்டு யானைகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கணக்கெடுப்பின்போது அதிக யானைகளை காண முடிந்தது. இதன் விவரங்கள் தொகுத்து அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அதன்பின்னர் எத்தனை யானைகள் உள்ளது என்ற விவரம் தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்