வனப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரிப்பு:சுருளியாறு மின்நிலைய பகுதியில் உலா வரும் யானைகள்
வனப்பகுதியில் கொசுக்கள் ெதால்லை அதிகரிப்பால் சுருளியாறு மின்நிலைய பகுதியில் யானைகள் உலா வருகின்றன.;
கூடலூர் அருகே சுருளியாறு மின் நிலையத்தையொட்டி வண்ணாத்திப் பாறை, மங்கலதேவி கோவில், பளியன்குடி, அத்தி ஊத்து, மாவடி, வட்ட தொட்டி, சுருளி அருவி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், யானை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் கொசுக்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த கொசுக்களின் தொல்லை காரணமாக சுருளியாறு மின்நிலையத்தை ஒட்டிய புளிச்சக்காடு, கோபுரம், மாடம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த யானைகள் கடந்த சில தினங்களாக சுருளியாறு மின் நிலையம் செல்லும் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.