தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-10-19 18:38 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் நடப்பாண்டில் 4-வது முறையாக பால் விலையை உயர்த்தி உள்ளன. 3 சதவீத கொழுப்பு சத்துள்ள பால் ஆவினை விட 25 சதவீதம் அதிகமாகவும், 6 சதவீத கொழுப்பு சத்துள்ள பால் ஆவினை விட 50 சதவீதம் அதிகமாகவும் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து கொண்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை பால்விலையை உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பாலை அடைத்து விற்பதற்கான பிளாஸ்டிக் உறைகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதும் தான் பால் விலை உயர்வுக்கு காரணம் என்று தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் உறைகள் தயாரிப்பு செலவு என்பது மிக மிக குறைவான ஒன்றாகும். இதை காரணம் காட்டி பால்விலை உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் கூறுவது பால் உற்பத்தியாளர்களையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.

மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலை கட்டுக்குள் அடங்காமல் உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. இதை தடுக்க பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்.

ஆவின் பால் உற்பத்தியை அதிகரித்து தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்