அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குளு... குளு... சீசன்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

திற்பரப்பு பகுதியில் கொட்டி தீர்த்த வரும் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளியலிட்டு மகிழ்ந்தனர். அருவி பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குளு... குளு... சீசன் நிலவியது.

நீர் வரத்து அதிகரிப்பு

மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 17.56 அடியாக இருந்தது. அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு 479 கன அடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று 200 கனஅடி அதிகரித்து வினாடிக்கு 679 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு நேற்றுமுன்தினம் 103 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 213 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வீடு இடிந்தது

தொடர் மழை காரணமாக விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்ைல.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 32.2 மில்லி மீட்டர் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக குழித்துறையில் 26.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை- 7.6, பெருஞ்சாணி- 17.2, பூதப்பாண்டி- 6.4, களியல்- 20.6, கொட்டாரம்- 14, மயிலாடி- 8.4, நாகர்கோவில்- 7.2, சுருளோடு- 17, தக்கலை- 19, குளச்சல்- 6, இரணியல்- 8.2, பாலமோர்- 19.4, மாம்பழத்துறையாறு- 20.6, திற்பரப்பு- 16.8, அடையாமடை- 14.3, குந்தன்கோடு- 14.4, ஆனைக்கிடங்கு 8.4, முக்கடல் 9.3 என பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்