குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Update: 2023-07-19 18:45 GMT

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தாமதமாக தொடங்கிய சீசன்

குற்றாலத்தில் வழக்கமாக ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும்.

இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாக ஜூலை மாதத்தில் தான் தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குளித்து செல்கிறார்கள்.

நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கத்தாலும் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.

இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். காலை 6 மணிக்கு நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் சென்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இதேபோல் ஐந்தருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. பழைய குற்றாலம், புலியருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இடையிடையே இதமான வெயிலுடன் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இதனால் குளுகுளு சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்