வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் உயர்வு; தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை உயர்த்தி உள்ள தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-31 06:49 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

விடியா தி.மு.க. அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 38 மாதங்களில் மூன்று முறை மின்கட்டண உயர்வு, இருமடங்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு, பலமுறை பால் பொருட்கள் விலை உயர்வு, பல மடங்கு பதிவு கட்டணங்கள் உயர்வு, விண்ணை முட்டும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு என்று விடியா தி.மு.க. அரசு தமிழக மக்களை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது.

'காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கேற்ப, கால் காணி நிலத்தையாவது சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்று ஏங்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில், கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை இறக்கியது இந்த விடியா தி.மு.க. அரசு.

மேலே குறிப்பிட்ட கட்டணங்களையெல்லாம் செலுத்தி, சிரமப்பட்டு வீட்டு மனை வாங்கியவர்கள் வீடு கட்ட முயற்சிக்கும் போது, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களை வானளாவ உயர்த்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது இந்த அரசு.

இம்மாதம் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின்படி, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதியை இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்திவிட்டு சுலபமாக வீடு கட்டும் அனுமதியைப் பெறலாம் என்று நாக்கில் தேன் தடவிவிட்டு, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழக மக்களின் 'சொந்த வீடு' என்ற எண்ணத்தை கனவாகவே நீர்த்துப்போகச் செய்துள்ள நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரசாணைகளின்படி, சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் 1000 சதுர அடிக்கு சுமார் ரூ. 46,000-லிருந்து ரூ. 1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவே, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 1000 சதுர அடிக்கு சுமார் . 42,000- ரூ. 88,000 ஆகவும்; திருச்சி, சேலம், தாம்பரம் போன்ற மாநகராட்சிகளுக்கு சுமார் ரூ. 30,000-லிருந்து ரூ. 84,000 ஆகவும், என்று மாநகராட்சிகளின் தரத்திற்கேற்ப (Grade) வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களும் தரத்திற்கேற்ப (Grade) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின்படி, வரைபட அனுமதிக் கட்டணம் பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை, 1000 சதுர அடிக்கு ரூ. 22,000 முதல் ரூ. 1,00,000 வரை செலுத்த வேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின், வள்ளலார் அவர்கள் பாடிய குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ? ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ? என்ற வரிகளை தூங்கும்போதெல்லாம் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

'தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்பதை, நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்-அமைச்சருக்கு நினைவூட்டி, உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக திரும்ப பெற்று, பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்