புல்வெளிகளில் மான்கள் நடமாட்டம் அதிகரிப்பு
தொடர் மழையால் முதுமலை பசுமையாக காணப்படுகிறது. இதனால் புல்வெளிகளில் மான்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.;
கூடலூர்
தொடர் மழையால் முதுமலை பசுமையாக காணப்படுகிறது. இதனால் புல்வெளிகளில் மான்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
மான்கள் கூட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மட்டுமின்றி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதேபோல் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
தொடர் மழையால் வனவிலங்குகளுக்கு பயன் இல்லாத உண்ணி செடிகள் உள்ளிட்ட சில தாவரங்களும் பெருகி வருகின்றன. இதனால் உணவு தேவையை பூர்த்தி செய்ய உண்ணி செடிகள் இல்லாத இடங்களில் வளரும் புல்வெளிகளில் மான்கள் கூட்டம், கூட்டமாக நின்று புற்களை மேய்ந்து வருகின்றன. இதனால் பசுமையான புல்வெளிகளில் மான்கள் கூட்டமாக நிற்கும் அழகை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
தொந்தரவு செய்யக்கூடாது
அப்போது சில சுற்றுலா பயணிகள் மான்கள் கூட்டத்தை கண்டு புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட சில செயல்களில் ஈடுபடுவதால் மான்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வனவிலங்குகளுக்கு தொந்தரவு மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
எனவே, வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, தொடர் மழையால் முதுமலை வனப்பகுதி பசுமையாக மாறி உள்ளது. இதேபோல் தாவர உண்ணி, வனவிலங்குகளின் உணவு தேவையும் பூர்த்தியாகி வருகிறது என்றனர்.