10 ஆண்டுகளில் இல்லாத வருமானம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது
10 ஆண்டுகளில் இல்லாத வருமானம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வருமானம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதிநிர்மலா, வணிகவரித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
ஏமாற்றி வருகிறார்கள்
தமிழகத்தில் மற்ற துறைகளை விட அரசுக்கு வரக்கூடிய மொத்த வருவாயில் 87 சதவீதம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் இருந்து வருகிறது. இந்த துறைகள் மூலம் பெற்றுத்தரக்கூடிய வருவாயில் முதல்-அமைச்சர் தமிழகத்தில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்ய முடியும். வணிகவரித்துறையை பொறுத்தவரை ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்கும் வருவாயை பல மடங்கு உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள வணிகர்கள் நியாயமாக, நேர்மையாக வணிகம் செய்யும்போது அந்த ஜி.எஸ்.டி. வரியை சிலர் போலியாக பில் மட்டுமே கொடுத்து விட்டு ஜி.எஸ்.டி. நம்பர் கணக்கை தொடங்கி வைத்துக்கொண்டு அரசுக்கு ஜி.எஸ்.டி.யை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள்.
ஜி.எஸ்.டி. இல்லாமல் பொருள் வாங்கினால் தருகிறோம் என பொதுமக்களிடம் வணிகர்கள் கூறுகிறார்கள். அதை கடந்த ஆய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. யாரெல்லாம் செலுத்தாமல் உள்ளார்களோ? அதை வணிகர்கள் அரசு கவனத்துக்கு கொண்டு வந்தால் அதற்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என கூறியுள்ளோம்.
ஒரே ஆண்டில் வருவாய் உயர்வு
தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் மேலான வணிகர்களுக்கு துறைரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகு ரூ.67 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. கடந்த 10 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ஒரே ஆண்டில் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் இருந்த நிலையில் தற்போது 6 லட்சமாக உயர்ந்துள்ளது. உயர் அதிகாரிகள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. செய்யாத தவறுகளுக்கு 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை அறப்போர் இயக்கம் தவறு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் நடந்ததுபோல்...
2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை லோக் ஆயுக்தா கமிட்டி மூலம் தமிழகத்தில் 6 லட்சம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்ததாக தெரிய வந்துள்ளது உண்மை. ஆனால் எந்த காலத்தில், யாரால், எங்கு நடந்தது என தெரிவிக்காமல் தற்போது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்தது போல கூறுகிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்ெதந்த துறையினர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.1½ லட்சம் கோடி வருவாய்
முதல்-அமைச்சரின் ஆக்கப்பூர்வமான செயல்களால் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ.1½ லட்சம் கோடி வருவாயை பெற்றுத்தர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகள் அப்படியே உள்ளவர்கள்.
கடந்த ஆட்சியில் யாருக்கோ, எதற்கோ தவறுகள் செய்து இருக்கலாம். ஆனால் தற்போது அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி அதிகாரிகள் தவறும் செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரத்து செய்யப்படும்
பதிவுத்துறை சட்டம் 1908 சட்ட திருத்தம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும். அதன் பிறகு போலியாக பத்திரப்பதிவு பதிவு செய்தால் 3 முதல் 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும். அதன்படி ஆவணத்தை எழுதுபவர்கள், அதற்கு சாட்சியாக போகக்கூடியவர்கள் என அனைவருக்கும் தண்டனை. போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது ரத்து செய்யப்படும்.
புதிய கட்டிடங்கள்
தமிழகத்தில் 50 இடங்களில் பழமையான பதிவுத்துறை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டவும், புதிதாக பிரிக்கப்பட்ட தாலுகாவுக்கு 29 அலுவலகங்களில் புதிதாக கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பத்திரப்பதிவு அலுவலர்கள் பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அன்பழகன், அண்ணாதுரை, பன்னீர்செல்வம், சின்னப்பா, முத்துராஜா, தாட்கோ தலைவர் மதிவாணன், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் ஞானசேகரன், கூடுதல் ஆணையர் பரமேஸ்வரன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.