அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடு உள்பட 10 இடங்களில் வருமான வரி சோதனை
கரூரில் 3-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடு உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கரூர்,
தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தது. இதையடுத்து கடந்த மே 26-ந் தேதி அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 நாட்கள் சோதனை நடத்தினர்.
அப்போது சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர். தொடர்ந்து சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் மாதம் 13-ந் தேதி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்தி, ரமேஷ் வீடு, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு, வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் அலுவலகம், கரூர் ஜவகர்பஜாரில் உள்ள நகைக்கடை உள்பட 7 இடங்களில் 2 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.
10 இடங்களில்...
இந்நிலையில் கரூரில் நேற்று 3-வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளரான ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் நேற்று காலை 8.45 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள ராமவிலாஸ் வீவிங் பேக்டரி, கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் உணவகம், கொங்கு மெஸ் உணவகம், குறிஞ்சி பைனான்ஸ், கேப்பிடல் பைனான்ஸ், சேலம் சாலையில் உள்ள பாலவிநாயகா கிரஷர் அலுவலகம், மாயனூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் பண்ணை வீடு, கரூர் 80 அடி சாலையில் உள்ள அவரது அலுவலகம், வால்காட்டுபுதூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி பண்ணை வீடு ஆகிய 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மீண்டும் சோதனை
இந்த சோதனையில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்ட இடங்களில் சீல் அகற்றப்பட்டு மீண்டு்ம் நேற்று சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும், மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.