மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.;

Update: 2022-11-18 20:14 GMT

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்கிறது.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு

மேலும், காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது. இதையொட்டி பாபாநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 517 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் காட்டாற்று வெள்ளம் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும் கலந்து தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் வழக்கமான நிறத்தைவிட செந்நிறமாக செல்கிறது. இந்த தண்ணீர் பாசன கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு அனுப்பி நிரப்பப்படுகிறது.

அணைகள் நீர்மட்டம் உயர்வு

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2.30 அடி உயர்ந்து 93.90 அடியாக உள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,602 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 517 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 6 அடி உயர்ந்து 111.61 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து 78.35 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 383 கன அடியாகவும், வெளியேற்றம் 35 கன அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம் -45, சேர்வலாறு -37, மணிமுத்தாறு -10, நம்பியாறு -10, கொடுமுடியாறு -7, மாஞ்சோலை -37, காக்காச்சி -20, நாலுமுக்கு -11, ஊத்து -15, அம்பை -2, களக்காடு -3, கன்னடியன் கால்வாய் -4.

Tags:    

மேலும் செய்திகள்