தொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பியது

வாணாபுரம் பகுதியில் தொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-09-21 19:44 GMT

வாணாபுரம், 

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் வாணாபுரம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனிடையே வாணாபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் ஏரியில் ஏற்கனவே 50 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகமானது. இதனால் ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இந்த நீர் மூலம் அத்தியூர், பெரியகொல்லியூர், வாணாபுரம், நாகல்குடி, சீர்ப்பனந்தல், கடம்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள் அடுத்தடுத்து நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் மீன்களும் அதிக அளவில் துள்ளி குதித்து செல்கின்றன. இந்த மீன்களை பொதுமக்கள் வலைகள், துணிகள் மூலம் மிகுந்த ஆர்வத்துடன் பிடித்து செல்கின்றனர்.

வாய்க்கால்களை தூர்வார வேண்டும்

பருவ மழைக்கு முன்பே வாணாபுரம் பகுதியில் 6 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் பல ஏரிகள் முழுமையாக நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால் இந்தாண்டு விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.. இருப்பினும் பருவமழையையொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது விளைநிலங்கள் பாதிப்படையாமல் இருக்க வடிகால் வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்