பு.மடுவங்கரைஅரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி
பு.மடுவங்கரைஅரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகளவில் மாணவர்களை சேர்க்கும் வகையில் புதிதாக சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பரிசு வழங்கியும், மேளதாளங்களுடன் மாலை அணிவித்தும் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் புவனகிரி அருகே உள்ள பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரி வரவேற்றார். அதனை தொடர்ந்து புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்த 20 மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு '"மிஸ்டர் மடுவங்கரை", " மிஸ் மடுவங்கரை" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் சங்கீதா, சத்துணவு பொறுப்பாளர் கீதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை லட்சுமி பாரதி நன்றி கூறினார்.