மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கட்டுப்பாட்டு அறை திறப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் இருகட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம், டோக்கன் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வீடு, வீடாக நாளை (வியாழக்கிழமை) முதல் வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1,157 ரேஷன் கடைகள், 6 லட்சத்து 87 ஆயிரத்து 171 ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் 609 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 3 லட்சத்து 47 ஆயிரத்து 146 ரேஷன் கார்டுகளுக்கு முதல் கட்டமாக 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யப்படுகிறது. அதையடுத்து 548 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 3 லட்சத்து 40 ஆயிரத்து 25 ரேஷன்கார்டுகளுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 2-வது கட்டமாக விண்ணப்ப பதிவு நடக்கிறது.
இதற்கிடையே உரிமைத்தொகை திட்டம், விண்ணப்ப பதிவு தொடர்பான சந்தேகம், குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருக்கிறது. இதில் கலெக்டர் அலுவலகத்தை 1077 எனும் இலவச தொலைபேசி எண்ணிலும், 0451-2460320, 2460324 ஆகிய தொலைபேசி எண்கள், 8428420666 எனும் வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.