கன்னியாகுமரி: 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் நாளை திறப்பு
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.;
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் டெல்லியில் இருப்பது போல் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
தற்போது கொடிக்கம்பம் நிறுவும் பணி முடிவடைந்துள்ளது. கொடிமரத்தின் மேல் பகுதி சிவப்பு எச்சரிக்கை விளக்கு தேசியக்கொடி ஏற்றும் இரும்பு கயிறு போன்றவை பொருத்தப்பட்டு ராட்சத கிரேன் உதவியுடன் கொடிமரம் நிறுவும் பணியும் நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இதன் திறப்பு விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இந்த ராட்சத தேசிய கொடி கம்பத்தில் பறக்கவிடப்படும் தேசியக்கொடி வருடத்தின் எல்லா நாட்களும் இரவும் பகலுமாக பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு வசதியாக மின்னொளியில் மிளிர செய்வதற்கான மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.