செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட 2-ம் கட்ட தொடக்க விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட 2-ம் கட்ட தொடக்க விழா நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.;
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை முதற்கட்டமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது இந்த திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்க தொடக்க விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும், இந்த திட்டத்தை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக பகுதிகளில் 611 பள்ளிகள், 608 சமையலறை கூடங்கள் மற்றும் 3 உணவு பரிமாறும் இடங்கள் என மொத்தம் 40 ஆயிரத்து 90 மாணவ- மாணவிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 29 பள்ளிகள், 2 சமையல் கூடங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 495 மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.