விளாத்திகுளத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்தது ஏன்?: கைதான சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்
விளாத்திகுளத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்தது ஏன்?:என கைதான சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.;
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில், வாலிபரை வெட்டிக் கொலை செய்தது ஏன்? என, கைதான சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
கூலி தொழிலாளி
விளாத்திகுளம் மீரான்பாளையம் தெரு கேசவன் நகரைச் சேர்ந்தவர் சோலையப்பன் மகன் கார்த்திக் ராஜ் (வயது 32), கூலி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான 16 வயது சிறுவனும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கார்த்திக் ராஜ் மீரான்பாளையம் தெரு வழியாக தனது வீட்டுக்கு மோட்டார் ைசக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அவரை வழிமறித்த சிறுவன் திடீரென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினான். பின்னர் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று, ரத்தவெள்ளத்தில் கிடந்த கார்த்திக் ராஜை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுவன் சிக்கினான்
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சிறுவனை நேற்று விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறுகையில், நானும், கார்த்திக்ராஜூவும் உறவினர்கள். எங்கள் குடும்பத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த முன்விரோதத்தில் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன். பின்னர் போலீசார் என்னை பிடித்து கைது செய்து விட்டனர், என தெரிவித்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.