விளாத்திகுளத்தில்நகைக்கடையில் கொள்ளை முயற்சி

விளாத்திகுளத்தில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Update: 2023-01-26 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் நகை அடகுக்கடையில் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கடைபூட்டை மர்மநபர்களால் உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

கொள்ளை முயற்சி

விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் சேர்மத்துரை (வயது 47). இவர் விளாத்திகுளம் -மதுரை சாலையில் வெள்ளி நகைக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் முடிந்து அவர் கடையை பூட்டிச் சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க சென்றபோது கடை இருந்த கதவை வெல்டிங் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவரும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நகைகள் தப்பின

விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பூட்டியிருந்த கடையின் கதவை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்துள்ளனர். பின்னர் ஷட்டர் பூட்டை திறக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் கடையில் முன்பு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர். அத்துடன் கடையின் படிக்கட்டுகளில் மிளகாய் பொடியை தூவி சென்றிருப்பதும் தெரியவந்தது. இதனால் கடையில் இருந்த பலலட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின. அந்த கடைக்கு தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விளாத்திகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்