விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2023-09-17 18:45 GMT

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

விநாயகருக்கு அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை மற்றும் தேங்காய், பழம் ஆகியவற்றை படைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

பூஜைபொருட்கள் விற்பனை

இதையொட்டி விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள மார்க்கெட்டில் பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சிலர் தற்காலிகமாக கடைகள் அமைத்து வாழைத்தார், தேங்காய், இலை, அவல், பொரி, கடலை மற்றும் பழவகைகள் ஆகியவற்றை வைத்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார், இலை, பழங்கள், கரும்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வாங்கிச்சென்றனர்.

குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வாங்கும் வகையில் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, விளாம்பழம், நாவல்பழம், கம்பு, மக்காச்சோளம், கலாக்காய், கேழ்வரகு, பேரிக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் மளிகை கடைகளில் அவல், பொரி, கடலை, வெல்லம், நெய் ஆகியவற்றின் வியாபாரமும் சூடுபிடித்தது.

விநாயகர் சிலைகள் விற்பனை

அதேபோல் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண்ணால் தயாரிக்கப்பட்ட ஏராளமான சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விழுப்புரம் காமராஜர் சாலை, எம்.ஜி.சாலை, திரு.வி.க. சாலை, கே.கே.சாலைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. குறைந்த பட்சம் ரூ.70 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

இதேபோல் விழுப்புரம் அருகே அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், அரசூர், சித்தலிங்கமடம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு தோற்றம் கொண்ட இந்த விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்குழுவினர் தங்களது பகுதிகளில் வைத்து வழிபடுவதற்காக வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்