விழுப்புரத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-01-30 19:00 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நேற்று) முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் புதிய நோயாளிகளை கண்டறியும் முகாம்கள் நடைபெற உள்ளது.

முற்றிலும் குணப்படுத்த முடியும்

அதன் தொடக்கமாக தற்போது தொழுநோயை வென்று சரித்திரமாக்குவோம் என்ற குறிக்கோளை அடிப்படையாகக்கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்ற பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொழுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உரிய மருத்துவ சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். எனவே உடலில் ஏதேனும் வெளிர்ந்த, சிவந்த, உணர்ச்சியற்ற தேமல் மற்றும் வெண்புள்ளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவரை தொடர்புகொண்டு ஆலோசனைபெற்று தொழுநோய் வராமல் தடுக்கலாம் என்றார்.

இப்பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், தொழுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா, துணை இயக்குனர் (தொழுநோய் பிரிவு) மாதுளா, துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்