விழுப்புரம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 8 219 பேர் எழுதுகின்றனர்
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 25, 26-ந் தேதிகளில் நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 8,219 பேர் எழுதுகின்றனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் ஆய்வு செய்தார்;
விழுப்புரம்
எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பதவிக்கு 444 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தமிழகம் முழுவதும் வருகிற 25, 26-ந் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) எழுத்துதேர்வு நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்பக்கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 6 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
8,219 பேர் எழுதுகின்றனர்
இத்தேர்வை எழுத தற்போது காவல்துறையில் பணியில் உள்ள 276 பேரும் மற்றும் 7,943 தேர்வர்களும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மேற்கண்ட தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக குடிநீர், கழிவறை, காற்றோட்டமான வசதி மற்றும் தடையில்லா மின்சார வசதி ஆகியவற்றை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.