வாகனங்களில்அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்த தடை விதிக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கூடலூர் பகுதியில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்த தடை விதிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக-கேரள மாநில எல்லை பகுதியில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவமனை, வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலை வழியாக தேக்கடி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் எப்போதும் இந்த பகுதி வழியாக வாகனப் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதனால் கூடலூர் பகுதிக்கு வரும் பஸ் மற்றும் வாகனங்களுக்கு ஹாரன் பயன்படுத்த தடை உள்ளது. இதனை யாரும் கடைபிடிப்பது கிடையாது. பெரும்பாலான தனியார் பஸ் டிரைவர்கள் நகர் பகுதிக்குள் நுழைந்தவுடன் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் கூடலூர் நகர் பகுதியில் மெயின் சாலையில் இருசக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திடீரென்று பஸ்களில் இருந்து ஹாரன்களை ஒலிப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தவறி கீழே விழுந்து சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. பெரிய விபத்து ஏற்படும்போது மட்டுமே போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற நாட்களில் அவர்கள் கண்டு கொள்வதில்லை. எனவே அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதை தடுக்க அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். மேலும் ஹாரன்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.