மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ரூ.2¼ கோடிக்கு சமரச தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு மக்கள் நீதி மன்றத்தில் 101 வழக்குகளில் ரூ.2¼ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.;
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் தலைமையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ரூ.2¼ கோடிக்கு தீர்வு
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 660 வங்கி வாராக்கடன் வழக்குகளில் 91 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.1 கோடியே 27 லட்சத்து 55 ஆயிரத்து 501 ஆகும்.
மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 66 வழக்குகளில் 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.95 லட்சத்து 93 ஆயிரத்து 232 ஆகும். மொத்தம் நேற்று நடந்த சிறப்பு நீதிமன்றத்தில் 726 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 101 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.2 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 733 ஆகும்.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி (பொறுப்பு) பிஸ்மிதா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் இசக்கியம்மாள் மற்றும் பால் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.