தூத்துக்குடியில்கணவன், மனைவி வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் கணவன், மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உறவினர் உள்பட இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.;
தூத்துக்குடியில் சொத்து தகராறில் கணவன், மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவன்-மனவைி
தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மாயா என்ற ராம்குமார் (வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (42). இவரது அண்ணன் முருகேசன் (49) என்பவர் அதே தெருவில் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
வெட்டிக் கொலை
இந்த நிலையில் நேற்று இரவு ராம்குமார் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து ராம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் முருகேசன் உள்ளிட்ட 2 பேரும், ராம்குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த ராம்குமாரின் மனைவியும், தனது சகோதரியுமான மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட முருகேசன் உள்ளிட்ட 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற முருகேசன் உள்ளிட்ட 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடியில் இரவில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---------