தூத்துக்குடியில் அரசு பஸ்களில் புத்தக திருவிழா ஸ்டிக்கர்: கலெக்டர் செந்தில்ராஜ் ஒட்டினார்

தூத்துக்குடியில் அரசு பஸ்களில் புத்தக திருவிழா ஸ்டிக்கரை கலெக்டர் செந்தில்ராஜ் ஒட்டினார்

Update: 2022-11-20 18:45 GMT

தூத்துக்குடியில் 3-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அரசு பஸ்களில் ஸ்டிக்கர்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஒட்டினார்.

புத்தக திருவிழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா வரும் 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 8 நாட்கள் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம்.கமலவேல் மகாலில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தக திருவிழாவில் தினமும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. தினமும் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் தினமும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த புத்தக திருவிழாவில் பங்கேற்கும் நபர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2- வது பரிசாக ரூ.50 ஆயிரம், 3-வது பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

ஸ்டிக்கர்

இந்த நிலையில் இந்த புத்தக திருவிழா குறித்து பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் வகையில் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டினார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பீவி ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்